கண் காணும் இடமெல்லாம் செந்நெல்க் கழனிகளும், தன்னிகரில்லா தென்றல் தரும் பசுமரங்களும், இன்னிசைப் பாடும் பூங்குருவிகளும், சூழ அமைதியும், ஆனந்தமும் பொங்கிப் பெருகும் அற்புதமான தலமே திருமகேந்திரபள்ளி என்னும் மகேந்திரபள்ளி கிராமம்.
திருஞானசம்பந்தப் பெருமான் தேவாரம் பாடி இறைவனை வணங்கி, வழிபட்ட இந்த ஊர் சைவ வைணவ ஒற்றுமையை ஓங்குவிக்கும் வகையில் திருமேனியழகர் சிவாலயத்தையும், ஸ்ரீவிஜயகோதண்ட ராமஸ்வாமி திருமால் ஆலயத்தையும் ஒருங்கே கொண்டு அருள்புரிகின்றது. அமைதியான இந்த ஊர் இறையருளோடு இன்றியமையாத இயற்கை வளத்தால் மனநிம்மதியையும் வாரி வழங்குகின்றது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
 
முத்தும், பவளமும் கரை ஒதுங்கும் கடலின் அருகேயுள்ள தலமென்றும், நீர் முள்ளி, தாழை மற்றும் தாமரை பூக்கும் பொய்கையும், கோங்கு, வேங்கை, புன்னை, கொன்றை, அகில், வெண்கடம்பை போன்ற மரங்களையும் கொண்ட பதியென்றும் குறிப்பிடும் சம்பந்தர் இத்தல பதிகம் கேடயமாக இருந்து நமை பாதுகாக்க வல்லதென அற்புதமாகப் பகர்கின்றார். ஆதியில் தேவர்களுக்கு குருவாய் விளங்கிய சகலகலா வல்லவரான பிரகஸ்பதி என்னும் தேவகுரு காழி மாநகர் எனப்படும் சீர்காழி தலத்தை அடைந்து, பிரம்மபுரீசரை துதித்துப் போற்றி இந்த மகேந்திரபள்ளி திருத்தலத்தில் தவமியற்றி, இறைவனிடம் வரங்கள் பல பெற்றார். தேவகுருவின் பொருட்டு தேவேந்திரனும், ஏனைய தேவர்களும் இத்தலம் எய்தினர்.
 
தான் தவம் புரிந்த இத்தலத்தில் ஓர் ஆலயம் எழுப்பிட விரும்பி, தேவேந்திரனிடம் தன் எண்ணத்தை தெரிவிக்கின்றார். தேவகுரு பிரகஸ்பதி. உடன் தேவ தச்சர்களையும், சிற்பிகளையும் அழைத்து, ஓர் அழகான சிவாலயத்தை எழுப்பினான் இந்திரன். மகேந்திரன் கட்டியதால் இந்த சிவத்தலம் மகேந்திரப்பள்ளி ஆனது.
மகேந்திரனோடு பிரம்மா, சூரியன், சந்திரன் போன்றோரும் இத்தல ஈசரை வழிபட்டு பேறுகள் பெற்றுள்ளனர். அதி அற்புதமாக விளங்கும் இச்சிவாலயத்திற்கு சற்றே வடக்கில் கம்பீரமான சிலைகள் கொண்டு காண்போரை கவர்ந்திழுக்கிறது ஸ்ரீவிஜய கோதண்டராம சாமி ஆலயம். இந்திரன் தோற்றுவித்தத் திருக்குளமான மகேந்திரபுஷ்கரணி ஆலயத்தின் முன் பரந்துள்ளது. 3 நிலைகள் கொண்ட சிறிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கிட... உள்ளே... ஸ்வாமி சந்நதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியும் அமையப் பெற்றுள்ளது.
 
முறையே கோஷ்ட தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ள சிறியதொரு ஆலயம் எனினும், அருள் நிரம்பியுள்ளது. ஸ்வாமி சந்நதிக்கு பின்புறம் மதிலொட்டி சில சிலாமூர்த்தங்களை அமைப்பது சோழர் பாணியாகும். அதுபோன்றே இங்கும் சில சிலாவடிவங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மூலவர் அற்புத வழவழ பாணம் கொண்டு எழிலுற காட்சி தருகின்றார்! திருமேனியழகர் என்பது இவரது திருநாமமாகும். பெயருக்கேற்ற அழகிய லிங்க மூர்த்தம். அம்பிகையும் இங்கு தனது நாமாவளிக்கு பொருந்தும் வகையில் வடிவாம்பிகை என்கிற திருநாமம் கொண்டு கண்களுக்குக் கவினூட்டுகின்றாள்! அருட்பிரவாகமான இத்தல மூர்த்தங்கள் நமக்கு அருளை வாரி வழங்குவது திண்ணம். கதிரவனின் ஒளிக்கரங்கள் இறைவனை பூஜிக்கும் வகையில் அமைக்கப்படும் சோழர்பாணி ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஒருவாரம் சூரியக் கதிர்கள் விழும் சூரிய பூஜை வெகு விசேஷமாக இங்கு நடைபெறுகின்றது. 
 
மற்ற சிவ விசேஷங்களும் இங்கு பிரசித்தமே. திருஞானசம்பந்தர் இத்தலம் மீது ஒரு பதிகம் பாடி அருளியுள்ளார். அருணகிரிநாதரும், வள்ளலாரும் போற்றிய பதியிது. சம்பந்தர் சிவஜோதியில் கலந்திட்ட ஆச்சாள்புரம் கடந்தே இத்தலத்தை அடைய முடியும். தலவிருட்சமாக ஈசனுக்கு ஆகாத தாழை விளங்குகிறது. இருப்பினும் இத்தலநாதன் இங்கு மட்டும் தாழையை விரும்பி ஏற்கின்றார். தினமும் இவ்வாலயம் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும். தினசரி இங்கு இரண்டுகால பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு வந்து வழிபடுவோரது கிரக தோஷங்கள் நீங்குவதோடு, சிறந்த ஞானமும், புகழும் கிடைத்திடும் என்பது தேவார வாக்காகும். மகேந்திர பள்ளியுளானை வழிபட்டு மனநிறைவடைவோம். நாகை மாவட்டம், சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த இவ்வூர் சிதம்பரம்  சீர்காழி வழித்தடத்திலுள்ள கொள்ளிடத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்து மகேந்திரபள்ளிக்கு டவுன்பஸ் வசதியுள்ளது...